PBTSELANGOR

தடுப்பூசித் திட்டத்தில் முதியோர் பதிந்து கொள்ளாததற்கு ஊசி மீதான அச்சமும் காரணம்

ஷா ஆலம், ஏப் 5– தேசிய கோவிட்-19 திட்டத்தில் பெரும்பாலான முதியோர் பதிந்து கொள்ளாததற்கு ஊசி மீதான பயம், தடுப்பூசியின் ஆக்கத்தன்மை குறித்த சந்தேகம் ஆகியவையும் காரணமாக விளங்குவதாக கூறப்படுகிறது.

பெர்டானா ஜெயா காலை சந்தை, ஆலாம் ஜெயா காலைச் சந்தை மற்று பத்து 9, சீனப்பள்ளி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையின் போது இந்த உண்மையை தாங்கள் கண்டறிந்ததாக டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் எடி யூசுப் கூறினார்.

ஊசி மீதான பயம் மற்றும் தடுப்பூசி பலன் தருமா என்ற அவநம்பிக்கை போன்ற காரணங்களால் மூத்த குடிமக்களில் பலர் தடுப்பூசிக்கு பதிந்து கொள்வதில் பொறுத்திருந்து பார்க்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, பிள்ளைகள் கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து  தங்கள் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

மேற்கண்ட மூன்று இடங்களில் தாங்கள்  நடத்திய தடுப்பூசி பதிவு இயக்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறிய அவர், 50 வயதைக் கடந்த சீன சமூகத்தினரே அவர்களில் அதிகம் இருந்ததாகச் சொன்னார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மேலும் அதிகமானோர் பதிந்து கொள்வதை உறுதி செய்வதற்காக சந்தைகளில் இத்தகைய பதிவு நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :