Express Rail Link Sdn Bhd (ERL) menggantung semua perkhidmatan trennya bermula esok
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

இ.சி.ஆர்.எல்.- வடக்கு வழித்தடத்துக்கு நிலம் கையகப் படுத்தலை மாநில அரசு செய்யாது – சிலாங்கூர் திட்டவட்டம்

ஷா ஆலம், ஏப் 6– தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட வடக்கு வழித்தடம்தான் வேண்டும் என்று மத்திய அரசு அடம் பிடித்தால் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்திற்கு நிலம் தர மாட்டோம் என்று சிலாங்கூர் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இவ்விவகாரம் மீது சிலாங்கூர் அரசுக்கு நம்பிக்கையூட்டுவதில் தோல்வி கண்ட மத்திய அரசு,  மாநில நிர்வாகத்தை சிறுமைப்படுத்தும் தோரணையில் ஒரு தலைப்பட்சமான முடிவை அறிவித்துள்ளது என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

நகர்புற மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்ட சட்டத்தின் 20ஏ பிரிவின் படி, அந்த இரயில் திட்டம் தொடர்பில் மத்திய அரசு மாநில திட்டமிடல் செயல்குழுவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த பேச்சு வார்தை இரு தரப்பின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டுமே தவிர ஒரு தரப்பு மட்டும் தன்மூப்பாக முடிவெடுக்க க்கூடாது என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சு எடுக்கும் நிலையற்ற முடிவுகள் காரணமாக தெற்கு வழித்தடம் தொடர்பில் மாநில அரசு மேற்கொண்ட பூர்வாங்கப் பணிகள் பயனற்றுப் போய்விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பரிந்தரைக்கப்பட்டதைப் போல் வடக்கு வழித்தடத்தில் சிறிய மாற்றங்களுடன் இரயில் தண்டவாளத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று கூறியிருந்தது.

இத்திட்ட அமலாக்கத்திற்கு 5,000 கோடி வெள்ளி வரை செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

இதற்கு முன்னர், உலு லங்காட், சிப்பாங், மேற்கு துறைமுகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு வழித்தடத்தில் அந்த இ.சி.ஆர்.எல். திட்டம் மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

குறைவான கட்டுமானச் செலவு, குடியிருப்புகளுக்கு குறைந்த அளவில் பாதிப்பு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் நீர்ப் பிடிப்புப் பகுதியின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தெற்கு வழித் தடத்தை மாநில அரசு பரிந்துரைத்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதற்கு முன்னர் கூறியிருந்தார்.


Pengarang :