NATIONALPBTSELANGOR

நிலையான நிர்வாகத் திட்ட சிறப்பு விருதுகளை பெ.ஜெயா மாநகர் மன்றம் பெற்றது

பெட்டாலிங் ஜெயா, ஏப் 6- ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்கை நிறைவேற்றியதற்காக மூன்று சிறப்பு விருதுகளை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான மலேசிய ஜி.பி.எம். நீடித்த அங்கீகார விருதளிப்பில் நில வடிவமைப்புத் துறையின் ஏற்பாட்டிலான கெபுன் கித்தா திட்டம், டத்தரான் அனாக் மூடா பி.ஜே. பிரிவின் ஏற்பட்டிலான் கெபுன் கித்தா திட்டம் மற்றும் டாமாய் செத்தியா பிரிவின் செகார் தானி திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

இத்திட்ட அமலாக்கத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பார்வையிட்ட ஜூரிகள் குழு 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திட்டங்களாக அந்த அந்த மூன்று திட்டங்களை அறிவித்தது. ஊராட்சி மன்ற அளவில் பெறப்பட்ட முதலாவது விருது இதுவாகும்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக  மற்றும் ஆற்றல்மிக்க நகரமாக பெட்டாலிங் ஜெயாவை உருவாக்கும் இலக்கை நிறைவேற்றும் வகையிலும் மேலும் ஆக்ககரமான முறையில் சேவையாற்ற தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அத்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.

2020ஆம் ஆண்டிற்கான மலேசிய பசுமைத் திட்ட நிர்வாக விருதளிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்  முதல் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்டன.


Pengarang :