ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரில்  இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா உருவாக்கம்

ஷா ஆலம், ஏப் 8– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சிறு தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை வீ.கணபதிராவ் தலைமையிலான சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோர் வர்த்தக தளவாடப் பொருள்களை பெருவதற்கு இத்திட்டம் வழி வகுக்கும்  என்றார் அவர்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் ஒப்புதலின் பேரில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு இவ்வாண்டில் 17 லட்சம் வெள்ளியும் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 லட்சம் வெள்ளியும்  மானியமாக வழங்கப்படும் என்று கணபதிராவ் கூறினார்.

இத்திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஆறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள்  மாநிலத்திலுள்ள சமூகத் தலைவர்களுடன் இணைந்து இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு தகுதி உள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுவர் என்றார் அவர்.

அதிகாரத்துஷ்பிரயோகம் அல்லது நிதியை தவறாக பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்கு ஏதுவாக இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொறுப்பு நில அலுவலகங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இந்திய சமூகத்திற்கென இத்தகைய பிரத்தியேக திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. இது மட்டுமின்றி இந்திய சமூகத் தலைவர் பதவிகளை உருவாக்கியதன் மூலம் அச்சமுதாயத்தின் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் என்பதை சிலாங்கூர் அரசு தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்று அவர் கூறினார்.


Pengarang :