ECONOMYSELANGOR

பத்தாண்டு வளர்ச்சி திட்டத்தை மறுஆய்வு செய்ய சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், ஏப் 8- நடப்புச் சூழலை சமபடுத்தும் விதமாக அடுத்த பத்தாண்டுகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக அந்த திட்டத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2030 வரைக்குமான மேம்பாட்டு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நாம் ஏற்கனவே வரைந்துள்ளோம். ஆனால் தற்போது அத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனினும், மாநிலத்தில் மேம்பாட்டுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் கடப்பாடு நமக்கு உள்ளது என்றார் அவர்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில்  நடைபெற்ற சிறந்த அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வராததை கருத்தில் கொண்டு நோன்பு பெருநாளுக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில அரசு மறுஆய்வு செய்யவுள்ளதாக மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக பெரிய திட்டங்களை ஒத்தி வைக்கும் வகையில் அந்த வரவு செலவுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :