ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

தடுப்பூசித் திட்டத்திற்கு பதிவு செய்யாதவர்களை அடையாளம் காண்பீர்- கிராமத் தலைவர்களுக்கு அறிவுறுத்து

கோல லங்காட், ஏப் 8– தங்கள் பகுதியில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு இன்னும் பதிவு செய்யாதவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுமாறு மாநிலம் முழுவதும் உள்ள கிராமத் தலைவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசித் திட்டதிற்கு பதிவு செய்ய பொதுமக்களை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக ஊராட்சி மன்றங்களின் உதவியுடன் பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில் போஸ்டர்கள், பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் விழிப்புணர்வு இயக்கங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்படும்படி  கிராமத் தலைவர்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தின் வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்களை பதிவு செய்யும் பணியை கிராமத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூத்த குடிமக்கள் மற்றும் பூர்வக்குடியினர் உள்பட கோவிட்-19 திட்டத்திற்கு பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் மாநில அரசு இமுனிசெல் திட்டத்தை மாநில அரசு இம்மாதம் 4ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :