ALAM SEKITAR & CUACASELANGOR

தன்னார்வலர் குழுவுக்கு தீயணைப்பு வாகனம்- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், ஏப் 10– தன்னார்வலர் தீயணைப்புக் குழுவுக்கு தீயணைப்பு வாகனத்தை அன்பளிப்பாக வழங்கிய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் செமெஸ்தா சென். பெர்ஹாட் நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 160,000 வெள்ளி மதிப்பிலான அந்த தீயணைப்பு வாகனம் சவுஜானா உத்தாமா  தன்னார்வலர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக மனித மூலதனத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

சவுஜானா உத்தாமா பகுதியில் சுமார் எண்பதாயிரம் பேர் வசித்த போதிலும் அங்கு தீயணைப்பு நிலையம் இல்லை என்பதோடு ஆபத்து அவசர வேளைகளில் தீயணைப்பு வாகனம் அங்கு வந்து சேர அதிக நேரம் பிடிப்பதாக அவர் சொன்னார்.

சவுஜானா உத்தாமாவிலுள்ள கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற மண்டபத்தில் நடைபெற்ற தீயணைப்பு வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தன்னார்வலர் தீயணைப்பு குழு செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலைய நிலத்தில் முறையான கட்டிடம் எழுப்புவதற்கு ஏதுவாக அந்நிலத்தை ஆர்ஜிதம் செய்து தரும்படி கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

அன்பளிப்பாக வழங்கப்பட்ட அந்த தீயணைப்பு வாகனம் மூவாயிரம் லிட்டர் நீரை சேகரிக்கும் டாங்கி மற்றும் மீட்புப் பணிகளின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் கொண்டுள்ளது.


Pengarang :