ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நகைக்கடைகளில் அதிரடி விலைக் குறைப்பை நம்பி விடாதீர்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப் 11– நகைக்கடைகள் அறிவிக்கும் அதிரடி  விலைக்குறைப்பை நம்பிவிட வேண்டாம் என பொதுமக்களை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

தங்க ஆபரணங்களை வாங்கும் போது பயனீட்டாளர்கள் மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு மலிவு விற்பனையை குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைந்த விலையில் நகைகள் விற்கப்படுவதாக வெளிவரும் அறிவிப்புகளைக் கண்டு மயங்கிவிடக் கூடாது என்று அது கூறியது.

ஏமாற்றுச் செயல்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் தாங்கள் ஏமாற்றப்படாமலிருப்பதை உறுதி செய்ய பயனீட்டாளர்கள்  மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பயனீட்டாளர் அமைச்சின் அமலாக்கத் துறை இயக்குநர் அஸ்மான் ஆடாம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்குவதாக இருந்தால் அவர்கள் சரியான கடையை தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையிலான நகை வியாபார தந்திரங்களால் அவர்கள் ஈர்க்கப்படக்கூடாது. ஏனென்றால், அந்த இடங்களில் ஏதோ ஒன்று தவறானதாக இருக்கலாம் எனறார் அவர்.

இணையம் வாயிலாக நகை வாங்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட வியாபார மையம் நம்பிக்கைக்குரியதா மற்றும் முறையாக பதிவு பெற்றதா என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்திய அவர், எந்த  பொருளையும் வாங்குவதற்கு முன்னர் அதனை மதிப்பீடு செய்யும் அளவுக்கு விவேகம் உள்ளவர்களாக பயனீட்டாளர்கள் இருப்பது அவசியம் என்றார்.

கெடா மாநில நிலையிலான 2021ஆம் ஆண்டிற்கான பயனீட்டாளர் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வியாபாரிகள் அறிவித்துள்ள நகைகளின் விலை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது தொடர்பில் தமது துறை இவ்வாண்டில் எட்டு புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :