ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்வீர்- பொது மக்களுக்கு சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 11- கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம் என மாநிலத்தின் அனைத்து நிலையிலான மக்களையும் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல் ஹாஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது ஆரோக்கியம் மற்றும் சுபிட்சத்திற்காக அனைவரும் அவசியம் தடுப்பூசியை  பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொள்ள வேண்டும் என்பதோடு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளபடி தங்களுக்கான தருணம் வரும் வரை தடுப்பூசியைப் பெறுவதற்கு அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாட்சிமை தங்கிய சுல்தானின் இந்த அறிக்கையை சிலாங்கூர் அரச அலுவலகம் தனது முகநூல் வாயிலாக வெளியிட்டது.

இங்குள்ள ஷா ஆலம் மருத்துவமனையில் பைசர் பயோன்என்டெக் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவை (டோஸ்) இன்று பெற்றுக் கொண்டதன் வழி மாட்சிமை தங்கிய சுல்தானும் அவரின் துணைவியார் துங்கு பெர்மைசூரி நோராஷிகினும் கோவிட்-19 தடுப்பூசியைப் முழுமையாக பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷாவும் இன்று கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள அனைத்து முன்களப் பணியாளர்களும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டப் பின்னரே தாம் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக சுல்தான் முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :