ECONOMYSELANGOR

பத்து கேவ்ஸ்  இந்தியன் செட்டில்மெண்ட் நிலப் பிரச்னைக்குத் தீர்வு- 77 குடியிருப்பாளர்கள் நிலம் பெற்றன

செலாயாங், ஏப் 12– சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த பத்து கேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

அந்த பகுதியைச் சேர்ந்த 77 குடியிருப்பாளர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1960ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த குடியிருப்பாளர்களில் 25 பேருக்கு கடந்தாண்டு பத்து ஆராங்கில் நிலம் வழங்கப்பட்ட வேளையில் எஞ்சியோர் சம்பந்தப்பட்ட  பகுதியிலே நிலத்தைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அப்பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணி வரும் ஜூன் மாதவாக்கில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சாலை ஆற்றோரம் உள்ளதால் அதனை  மாற்றியமைக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

சாலை நிர்மாணிப்பு பணிகள் முற்றுப் பெற்றவுடன் குடியிருப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் குடியேறுவர் என்று இங்கு  நடைபெற்ற மீண்டும் பள்ளிக்கு செல்வோம் மற்றும் சித்திரை புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அவர், 100 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கியதோடு வசதி குறைந்த 32 பேருக்கு உணவுப் பொருள்களையும் அவர் வழங்கினார்.


Pengarang :