NATIONAL

மூத்த குடிமக்களுக்கு சினோவேக் தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த வாரம் தொடங்கும்

புத்ரா ஜெயா, ஏப் 12- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் போது நாட்டிலுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு  சீனாவின் சினோவேக் தடுப்பூசி போடப்படும் என்று அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அந்த தடுப்பூசி முதியோர்களுக்கு போடப்படுவது பாதுகாப்பானது மற்றும் ஆக்ககரமான பலனைத் தரக்கூடியது என்பது தரவுகளின் அடிப்படையிலும் இதர நாடுகளில் பயன்படுத்தப்பட்டதன் வாயிலாகவும் கண்டறியப்பட்டதைத்  தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு  துருக்கியில்  60 வயதுக்கும் மேற்பட்ட 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் பிரேசிலில் 70 லட்சம் பேருக்கும்  சிலியில் 30 லட்சம் பேருக்கு இந்த சினோவேக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஆகக் கடைசி நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

இதுவரை 85 லட்சத்து 13 ஆயிரம் பேர் கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்ரா ஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையிலானோர் கோவி-19 தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்த வேளையில் சபா, கிளந்தான், கெடா, திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :