ECONOMYSELANGOR

50 லட்சம் வெள்ளி நிதியில் எஸ்.எம்.இ. இலக்கவியல் கடனுதவித் திட்டம்-  சிலாங்கூர் தொடக்கியது

ஷா ஆலம், ஏப் 13- முதலீட்டுத் தொகைக்கு ஈடாக கடனுதவி வழங்க வகை செய்யும் 50 லட்சம்  வெள்ளி மதிப்பிலான சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் இலக்கவியல் கடனுதவித் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கியது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்குவதில் உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 தொழில் முனைவோர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு இலக்கவியல்மயத் திட்டத்தின் கீழ் உதவி புரிவதை  தாங்கள் பிரதான நோக்கமாக  கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கவியல் சேவை வழங்கும் தரப்பினரிடம் பதிந்து கொண்டவர்களுக்கு  முதலீட்டுக்கு ஈடான 50 விழுக்காட்டுத் தொகை அல்லது 5,000 வெள்ளி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றார் அவர்.

தங்கள் வர்த்தகத்தை இலக்கவியல்மயமாக்குவதற்கு போதுமான நிதி வளத்தைக் கொண்டிராத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் இந்த கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

மாநில அரசு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு இலக்கவியல் திட்டத்தை விரிவு படுத்துவதில்  தீவிர கடப்பாடு கொண்டுள்ளது. மாநில அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கடனுதவி வாய்ப்புகளை வர்த்தகர்களும் பயனீட்டாளர்களும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :