EVENTSELANGOR

15வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்- கெஅடிலான் நம்பிக்கை

ஷா ஆலம், ஏப் 18- கெஅடிலான் கட்சியிலிருந்து சில மக்கள் பிரதிநிதிகள் வெளியேறிய போதிலும் வரும் 15வது பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவை பெற முடியும் என சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.

இதே  போன்ற சவாலையும்  சூழ்நிலையையும் கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலின் போதும் கட்சி எதிர்நோக்கியதாக மாநில தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியதோடு  கோலக்கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரான அப்போதைய மந்திரி புசார் சுயேச்சை உறுப்பினராக தன்னைப் பிரகடனப்படுத்திக்  கொண்டார் என அவர் சொன்னார்.

கெஅடிலான் கட்சி வலுவான கொள்கையை கொண்டுள்ளது. திட்டங்கள் வாயிலாக அதனை நாம்  நிரூபித்து வருகிறோம். உருமாற்றம், சீர்திருத்தம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை செயல் வடிவில்  நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

கட்சியிலிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வெளியேறியுள்ள நிலையில் வரும் பொதுத் தேர்தலில் மக்களை ஆதரவைப் பெறுவதில் சிலாங்கூர் கெஅடிலான் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து விவரித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தை நிர்வகிக்கும் கெஅடிலான் கட்சியின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதோடு அது கால மாற்றம், நடப்புச் சூழல் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசாங்கமாகவும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஒரு அங்கமாகவும் விளங்கும் கெஅடிலான் எந்த சூழ்நிலையிலும் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை இடங்களைப் பெறும் என்பதில்  தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :