ECONOMYNATIONAL

தடுப்பூசி பெற்றவர்களுக்கு  நோய்த் தொற்று அபாயம் 10 மடங்கு குறைந்துள்ளது

கோல திரங்கானு, ஏப் 19– தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படும் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயம் 10 மடங்கு குறைந்துள்ளது.

தடுப்பூசி பெற்ற பின்னர் 40 சுகாதாரப் பணியாளர்கள் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது அந்நோய்த் தொற்றின் பாதிப்பு 10 மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளதை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை துணை அமைச்சர் டத்தோ அகமது அஸ்மாட் ஹஷிம் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 நோய்த் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்ட  போது ஒரு மாதத்திற்கு சராசரி 436 சுகாதாரப் பணியாளர்கள் அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானதாக அவர் சொன்னார்.

மொத்தம் 438,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றுக் கொண்ட நிலையில் அவர்களில் 40 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு ஆளாகினர் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் கோவிட்-19 நோயாளிகளை எதிர்கொள்ளும் முன்களப் பணியாளர்களாக இருந்த போதிலும்  அவர்களில் 99.9 விழுக்காட்டினர் அந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்களில் 40 சுகாதாரப் பணியாளர்கள் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத் துறை  தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :