ECONOMYNATIONALSELANGOR

பள்ளிகளைப் மையப்படுத்திய கோவிட்-19 சோதனையில் குடியிருப்புகளின் தூரம் கவனத்தில் கொள்ளப்படும்

ஷா ஆலம், ஏப் 25- பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கோவிட்-19 இலவச கோவிட்-19 பரிசோதனையில் நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்ட மாணவர்களின் குடியிருப்பு தூரம் கவனத்தில் கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சோதனைக்கான இடங்கள்  தொடர்பான விபரங்கள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், வட்டார மக்களிடையே நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதில் இந்த அணுகுமுறை முக்கியமானதாக விளங்குகிறது என்றார்.

பள்ளிகளை உட்படுத்திய நோய்த் தொற்று சம்பவங்கள் தொடர்பில் கடந்த வெள்ளியன்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டம் நடத்தப்பட்டது. முழு தங்குமிட வசதி கொண்ட பள்ளிகளாக இருந்தால் அதனை முழுமையாக முடக்கி விடலாம். ஆனால் தினசரி பள்ளிகள் என்பதால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது சிரமமானதாக உள்ளது என்றார் அவர்.

பள்ளிகள் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று பிரச்னையை நாம் அந்த பள்ளிகளை மட்டும் மையப்படுத்தி மட்டும் பார்க்கவில்லை. மாறாக, சமூத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தின் சுற்றளவு, பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பனப் போன்ற விபரங்களை பெற வேண்டியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள யுஎஸ்ஜே 13/2 விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் பணியாளரின் பிள்ளைக்கு நோய்த் தொற்று கண்டிருப்பதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் வெளியிட்ட  அறிக்கையை மையப்படுத்தியும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மூடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தங்கள் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் கோவிட்-19 சோதனையை நடத்தியது. பத்து பேரில் இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் மாநகர் மன்றத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.


Pengarang :