ARA?
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம்  ரத்து காரணமாக சாலை விபத்துகள் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 29- வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் இம்மாதம் முதல் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி நாளொன்றுக்கு சராசரி 180 விபத்துகள் கோலாலம்பூரில் பதிவு செய்யப்படுவதாக மாநகர சாலை போக்குவரத்து மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி ஜூல்கிப்ளி யாஹ்யா கூறினார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமலில் இருந்த போது பதிவான 50 முதல் 70  வரையிலான விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும் என்று அவர் சொன்னார்.

இந்த விபத்துகளில் 60 முதல் 70 விழுக்காடு வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்றும் எஞ்சியவை மோட்டார் சைக்கிள்களை உள்படுத்தியவை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் வேலைக்குச் செல்ல வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் பொருளாதார  நடவடிக்கைள் மீட்சிக் காண்பது போன்றவற்றால் சாலைகளில் ஏற்பட்ட வாகன அதிகரிப்பே  விபத்துகளின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜாலான் டூத்தா டோல் சாவடியில் வாகனமோட்டிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக, மக்கள் வேலைக்குச் செல்லும் சாலைகளில் அதிக விபத்துகள் நிகழ்வதாக கூறிய அவர், கடுமையான விபத்துகள் பொரும்பாலும் இரவு 10.00 மணிக்கு மேல் நிகழ்கின்றன என்றார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்ட அமலாக்கத்தின் போது இருந்ததை விட தற்போது சாலைகளில் வாகன எண்ணிக்கை 90 விழுக்காடு அதிகரித்துள்ளது. மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிக்கப்படாத போதிலும் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.

 


Pengarang :