K
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

நோன்பு பெருநாளின் போது உயர் கல்விக்கூட மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலம், ஏப் 29- சரவா தவிர்த்து நாட்டின் இதர மாநிலங்களில்  உள்ள உயர்கல்விக் கூடங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் நோன்பு பெருநாளின் போது வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் வழி நாடு முழுவதும் உள்ள உயர்கல்விக் கூடங்களில் தங்கி படிக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக உயர் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பல்கலைழக்கழகத்திலும் மாணவர்கள் வீடு திரும்பும் நடவடிக்கை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கை கூறியது.

மே மாதம் 7 முதல்  மே 12 தேதி வரை மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களிலிருந்து வீடு திரும்புவதற்கும் மே 15 முதல் மே 20 வரை மீண்டும் பல்கலைக்கழகம் செல்வதற்கும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள உயர்கல்விக் கூடங்களில் பயின்று வரும் 13 லட்சம் மாணவர்களில் 103,994 மாணவர்கள் மட்டுமே விடுதிகளில் தங்கி  படிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாள் விடுமுறையின் போது வீடு திரும்புவதா? அல்லது உயர்கல்விக் கூடத்திலேயே தங்கியிருப்பதா என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். கல்வித் துறைக்கு தேசிய பாதுகாப்பு மன்றம் ஏற்கனவே வழங்கிய நிபந்தனை தளர்வின்  அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களில் செல்வது, பெற்றோர்கள் அழைத்துச் செல்வது அல்லது உயர்கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்யும் பஸ்களில் பயணிப்பது ஆகிய மூன்று வழிமுறைகள் வாயிலாக மாணவர்கள் வீடு திரும்ப வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனினும், விமானப் பயணங்கள் நீங்கலாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாவட்ட அல்லது மாநில எல்லை கடப்பது தொடர்பான அனுமதி கடிதம், வீடு திரும்பும் மற்றும் மீண்டும் உயர்கல்விக்கூடம் செல்லும் தேதி உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு மாணவருக்கும் சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடம் தயார் செய்து தரும் என அந்த அறிக்கை கூறியது.

 

 


Pengarang :