ECONOMYNATIONALPBT

காலை 8.00 மணிக்கு முன்னதாக பயணிப்பவர்களுக்கு குற்றப்பதிவா? ஷா ஆலம் போலீஸ் மறுப்பு

ஷா ஆலம், மே 27– காலை 8.00 மணிக்கு முன்னதாக சாலைகளில் பயணிப்பவர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளி வந்த தகவல்களை ஷா ஆலம் மாவட்ட போலீசார் மறுத்துள்ளனர்.

ஷா ஆலம், செக்சன் 31, பெர்சியாரான் அங்கிரிக் எரியா உள்ள சாலைத் தடுப்பில் போலீஸ்காரர் மற்றும் வாகனமோட்டிக்கு இடையே நடைபெறும் உரையாடல்களை அடங்கிய காணொளி நேற்று காலை முதல் பரவலாகி வருவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் முகமது தாயிப் கூறினார்.

அந்த ஆடவரிடம் பயண சான்றுக் கடித த்தைக் கேட்கும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பயணத்திற்கான நோக்கத்தையும் கேட்டறிகிறார். மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் குறித்து விளக்குகிறார். ஆனால் அந்த வாகனமோட்டிக்கு குற்றப்பதிவை அவர் வழங்கவில்லை என்று பகாருடின் சொன்னார்.

காலை 8.00 மணிக்கு முன்னதாகவும் இரவு 8.00 மணிக்குப் பின்னரும் வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை அமலில் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்றார் அவர்.

இதனிடையே, நேற்று காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அந்த சாலைத் தடுப்புச் சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 78 பேருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :