ECONOMYHEALTHNATIONALPBT

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் தடுப்பூசி மையங்களக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி

ஷா ஆலம், ஜூன் 2- சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டாரத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியுள்ளார்.

வசதி குறைவான நிலையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

தடுப்பூசியை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்கள் தங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.

எங்கள் வாகன ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு  அழைத்துச் சென்று அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடியும் வரை உடனிருந்து பின்னர் வீட்டிற்கு அழைத்து வருவர் என்றார் அவர்.

இந்த பணியை மேற்கொள்வதற்காக 20 முதல் 55 வயது வரையிலான 15 வாகன ஓட்டுநர்கள் தொண்டூழிய அடிப்படையில் தங்களிடம் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதிக் கடிதம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இலவச சேவையைப் பெற விரும்புவோர் 012-2731336 என்ற எண்களில் யுஎஸ்ஜே 2 ருக்குன் தெத்தாங்கா தலைவரை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :