ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அண்டை நாட்டிலிருந்து புகைப் மூட்டப் பிரச்னை ஏற்படாது-  வானிலை ஆய்வுத் துறை ஆருடம்

கோலாலம்பூர், ஜூன் 4- அண்டை நாட்டிலிருந்து புகைமூட்டப் பிரச்னை இவ்வாண்டு ஏற்படாது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

அந்நாட்டில் காணப்படும் மந்தமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாண்டில் புகை மூட்டம் எல்லை கடந்து நாட்டை சூழ்வதற்குரிய வாய்ப்பு இல்லை என்று அது தெரிவித்தது.

மேலும் தற்போது நிலவி வரும் லா நினா பருவ நிலை மாற்றம் திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் ஜைலான் சைமன் கூறினார்.

அண்டை நாட்டில் வறட்சியான நிலை காணப்படவில்லை. ஆகவே, கடுமையான புகைமூட்டப் பிரச்னையை நாம் எதிர்நோக்குவதற்குரிய சாத்தியம் இல்லை. எனினும், அடுத்த மூன்று மாதங்களில் அங்கு வறண்ட சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வரும் மாதங்களில் என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது என்றார் அவர்.

அனைத்துலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயங்கலை வாயிலாக நடைபெற்ற நடப்பு  வானிலை- சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் விளைவுகள் என்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்துலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வோராண்டும் ஜூன் 5ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் தேசிய நிலையிலான சுற்றுச்சூழல் தினம் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்படுகிறது.

 


Pengarang :