MEDIA STATEMENTNATIONAL

10 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்று  கோவிட்-19 சம்பவங்கள் 4,000க்கும் கீழ் குறைந்தால் பி.கே.பி. தளர்வு-பிரதமர் அறிவிப்பு

ஷா ஆலம், ஜூன் 15- நாட்டில் 10 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்று தினசரி நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையும் நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்தால் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டம் அமல் செய்யப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

அதே சமயம், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்கள் பற்றாக்குறைப் பிரச்னை தீர்ந்து நாட்டின் சுகாதார பராமரிப்பு முறை கடுமையான கட்டத்திலிருந்து மீளும் நிலை உருவாகும் போதும் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

தேசிய சிறப்பு மீட்சித் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். இவ்வாண்டு இறுதி வரைக்குமான காலக்கட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார துறைகளை திறப்பு தொடர்பான நான்கு கட்டங்களை உள்ளடக்கிய திட்டத்தை அவர் அறிவித்தார்.

ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு மாறுவதற்கு தரவுகளை மையமாக கொண்ட மூன்று அளவுகோல்கள் அடிப்படையாக கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அந்த அளவுகோல்கள் பின்வருமாறு-

– தினசரி கோவிட்-19 சம்பவங்களை அடிப்படையாக கொண்ட நோய்த் தொற்றின் நிலைமை

– தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கட்டில்களை அடிப்படையாக கொண்டு  சுகாதாரத் துறையின் ஆற்றலை மதிப்பீடு செய்வது,

– இரு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களின் விழுக்காட்டின் அடிப்படையில் நோய்த் எதிர்ப்பு ஆற்றலை பெற்றவர்களை அளவிடுவது.

இரண்டாம் கட்டத் திட்ட அமலாக்கத்தின் போது மாநில எல்லைகளைக் கடப்பதற்கும் சமூக நடவடிக்கைளை மேற்கொள்வதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.


Pengarang :