ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஓ.பி. விதி மீறல்- ஷா ஆலம் பகுதியில் 15 தொழிற்சாலைகளுக்கு அபராதம்

ஷா ஆலம், ஜூன் 24- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிய குற்றத்திற்காக  ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 15 தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சின் அனுமதி கடிதம் இல்லாதது, தொழிலாளர் அனுமதிக்கான  நிபந்தனையை மீறியது,  வேலையிடங்களில் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தனித் தனி தடங்களை ஏற்படுத்தாதது ஆகிய குற்றங்களின் பேரில் அத்தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய  இந்த சிறப்பு நடவடிக்கையின் வழி இதுவரை 333 தொழிற்சாலைகள் சோதனையிடப்பட்டதாக கூறிய அவர், எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பல முதலாளிகள் இன்னும் கடைபிடிக்காமலிருப்பது இச்சோதனைகளில் தெரிய வந்தது என்றார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்யாதது, முகக் கவசம் அணியாதது போன்ற குற்றங்களுக்காக 22 தொழிலாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.

குற்றங்கள் புரிந்த முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் கட்டுப்பாடுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :