HEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

தடுப்பூசி பெறும் பணியை எளிதாக்க அதிகளவில் சிறிய தடுப்பூசி செலுத்தும் மையங்கள் உருவாக்கம்- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், ஜூன் 26– பொது மக்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதை எளிதாக்க சிலாங்கூர்  மாநிலத்தில் அதிகமான சிறு தடுப்பூசி செலுத்தும் மையங்கள் உருவாக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தற்போது  அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சுமார் 25 விழுக்காட்டினர் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி மையங்களுக்கு வரத் தவறுவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

குறிப்பிட்ட இடத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொள்ளாமல் பிருமாண்ட தடுப்பூசி செலுத்தும் மையங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் காரணத்தால் தடுப்பூசித் திட்டத்திற்கு மக்களிடம் சிறப்பான ஆதரவு கிட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வெகு தொலைவில் இருக்கும் இத்தகைய பிருமாண்ட தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்லும் வசதியை பலர் கொண்டிருப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு நிறைய இடங்களில் சிறிய தடுப்பூசி செலுத்தும் மையங்களை அமைக்கவுள்ளோம். இதன் வழி தடுப்பூசி பெற மக்கள் வெகு தொலைவு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசியின எண்ணிக்கை குறித்து ஏமாற்றம் தெரிவித்த சித்தி மரியா, கடந்த செவ்வாய்க்கிழமை வரை 11.2 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 3.6 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார்.

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கக்கூடிய சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின்  அளவு உண்மையில் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றார் அவர்.


Pengarang :