HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மக்கள் விரைவாக தடுப்பூசி பெறுவதை சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டம் உறுதி செய்யும்

ஷா ஆலம், ஜூன் 30– மாநில மக்கள்  தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்துவதற்காக சிலாங்கூர் மாநில தடுப்பூசித் திட்டம் (செல்வேக்ஸ்) தொடங்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுக்கான சாத்தியம் உள்ளவர்களை இலக்காக கொண்டு செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டமும் தொழிலாளர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டமும் அமல் படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் வழி இன்னும் தடுப்பூசி பெறாத 250,000 சிலாங்கூர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இத்திட்டம் 500,000 டோஸ் தடுப்பூசிகளை உள்ளடக்கியிருக்கும். 

செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஒரு கட்டணத்  திட்டமாகும். பத்து லட்சம் தொழிலாளர்களை இலக்காக கொண்ட இத்திட்டத்தில் முதலாளிகள் சுய விருப்பத்தின் பேரில் பங்கேற்கலாம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில மக்களில் 83.2 விழுக்காட்டினர் அதாவது 39 லட்சத்து 70 ஆயிரம் பேர் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்துள்ளதாக இயங்கலை வாயிலாக வெளியிட்ட அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.

எனினும், நேற்று முன்தினம் வரை 851,118 பேர் மட்டுமே முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் 270,221 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

போதுமான தடுப்பூசி இல்லாததே இந்த தாமதத்திற்கு காரணமாகும். இந்த தடுப்பூசி பற்றாக்குறைப் பிரச்னை சிலாங்கூர் மற்றும் மலேசியாவில் மட்டும் நிகழவில்லை. மாறாக, தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலும் இதே நிலை நீடிக்கிறது என்றார் அவர்.


Pengarang :