ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சொந்தமாக தடுப்பூசியை வாங்க ஜனவரி மாதம் முதல் சிலாங்கூர் முயற்சி- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூலை 1- கோவிட்-19 தடுப்பூசியை சொந்தமாக வாங்குவதற்காக சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி விநியோகிப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக மநதிரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், இதற்கான அனுமதியை தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவும் சுகாதார அமைச்சும் கடந்த ஜூன் மாதமே வழங்கியதாக அவர் சொன்னார்.

ஆகவே, மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநிலம் “திருடியதாக“ அல்லது அபகரித்துக் கொண்டதாக யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. மாறாக, தேவைக்கும் அதிகமான தடுப்பூசி கையிருப்பை பர்மாநியாகா நிறுவனம் வைத்துள்ளது என்றார் அவர்.

செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வழி வரும் அக்டோபர் மாதத்திற்குள் மாநிலத்தில் நோய்த் தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை முழுமையாக உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, டிரோப்பிகானா கார்டன் மாலில் உள்ள செல்வேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

செல்வேக்ஸ் திட்டத்திற்கான மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் மையமான இது தினசரி 16,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.


Pengarang :