ECONOMYHEALTHNATIONALPBT

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள தொழிலாளர் தங்கும் விடுதிகளில் கடும் பாதுகாப்பு

ஷா ஆலம், ஜூலை 2- கோவிட்-19 நோய்த் தொற்று தீவிரமாக பரவுவதற்கு தொழிற்சாலைகளும் அந்நியத் தொழிலாளர் குடியிருப்புகளும் காரணமாக உள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில்  நடமாட்டம் மீது அரசாங்கம் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கவுள்ளது.

இத்திட்டத்தை அமலாக்கம் செய்வதில் கோவிட்-19 நடமாட்டக் கட்டுபாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. கண்காணிப்பு ஒருங்கிணைப்புக் குழு (ஜே.கே.பி.எஸ்.) சிலாங்கூர் மாநில அரசு மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து செயல்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

நடமாட்டத்தைக் கட்டுப்படும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக  கோவிட்-19 நோய் பரவும் சாத்தியம் அதிகம் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் தங்கும் விடுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை ஜே.கே.பி.எஸ் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கி மேற்கொள்ளப்படும் ஓப்ஸ் பாத்தோ நடவடிக்கையில் நோய்த்  தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் முக்கிய இலக்காக கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் தரப்புக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :