HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோலாலம்பூர் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை- தரையில் சி.பி.ஆர். சிகிச்சை அளிக்கும் பரிதாபம்

கோலாலம்பூர், ஜூலை 4– அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவருக்கு தரையில் சிகிச்சையளிப்பதை சித்தரிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் கோலாலம்பூர் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நோயாளி சுவாசம் மற்றும் இருதய துடிப்பின்றி நினைவிழந்த நிலையில் அவசரமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹெரிக் கோர்ரி கூறினார்.

அச்சமயத்தில் அப்பிரிவில் கட்டில் எதுவும் காலியாக இல்லை. சமதரையான இடமாக தரை இருந்ததால் அங்கு அந்நோயாளிக்கு உடனடியாக சி.பி.ஆர். இருதய மீள் உயிர்ப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்நோயாளி இறந்து விட்டார் என அவர் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாததால் சவப்பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.

மருத்துவமனையில் புதிய நோயாளிகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாக கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியதாக நேற்று முன்தினம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனையில் கட்டில்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை டாக்டர் ஹெரிக் ஒப்புக் கொண்டார். எனினும், கட்டில்களின் பயன்பாடு மீது தேவையின் அடிப்படையில் அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :