Rusia mengumumkan mendaftarkan vaksin Covid-19 pertama di dunia, dikenali Sputnik V. Foto: REUTERS
HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மலேசியாவின் தடுப்பூசி ஆபத்தான நோய்த் தொற்றுகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கும்

ஷா ஆலம், ஜூலை 6– மலேசியா சொந்தமாக தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசி விரிவானதாகவும் புதிதாக உருவாகக்கூடிய நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில், புதிதாக தோன்றியுள்ள டெல்டா வகை நோய் தொற்றும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தொற்று நோய் ஆய்வு மையத்தின் நச்சு உயிரியல் ஆலோசக நிபுணர் டாக்டர் ரோஸாய்னானி முகமது ஜின் கூறினார்.

எங்கள் வைரஸ் வங்கியிலுள்ள புதிய வகை வைரஸ்கள் மீது ஆய்வு மேற்கொள்கிறோம். கோவிட்-19 சோதனையின் போது பெறப்பட்ட இந்த வைரஸ்கள் தற்போது சோதனைக்காக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

புதிய வகை நோய்த் தொற்று பரவும் போது அதனை நமது சோதனை நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அண்மையில் சிலாங்கூர் கினிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

புதிதாக கண்டுபிடிக்கப்படும் அந்த தடுப்பூசி பொருத்தமானதாகவும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

எனினும், அந்த தடுப்பூசி மீதான மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரும் 2024ஆம் ஆண்டில் அது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசியை உருவாக்குவது அதிக காலம் பிடிக்கக்கூடிய பணி என்பதோடு மிகவும் சிக்கலானது. தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான எந்த முன் அனுபவமும் மலேசியாவுக்கு கிடையாது என்றார் அவர்.

தடுப்பூசி ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக உலகின் முக்கிய தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துரைத்த அவர், அனுபவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக பிற நாடுகள் வெகு விரைவில் தடுப்பூசியை உருவாக்குகின்றன என்றார்.

இந்த தடுப்பூசியைத் தயாரிக்கும் திட்டம் கடந்தாண்டு மார்ச் மாதம் நோய்த் தொற்று பரவத் தொடங்கிய போது உருவானதாக அம்மையத்தின் தலைவர் டாக்டர் நோராஸா அகமது கூறினார்.

இந்நோக்கத்திற்காக அரசாங்கம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 31 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :