ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மெந்தாரி கோர்ட் பகுதியில் பி.கே.பி.டி. ஆணை முடிவுக்கு வந்தது

ஷா ஆலம், ஜூலை 13– பெட்டாலிங் ஜெயா, பி.ஜே.எஸ்.8 மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்டதை விட ஒரு நாள் முன்னதாக அந்த ஆணை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 நாட்களாக தாங்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் முடிவுக்கு வந்ததன் அறிகுறியாக சரியாக நள்ளிரிவு 12.00 மணிக்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் பெரும் கோஷம் எழுப்பியும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எனினும், பொது இடங்களில் ஒன்று கூடாமல் வீட்டிலிருந்தவாறே அவர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

அப்பகுதியில் போடப்பட்டிருந்த முள்வேலிகளை முன்களப் பணியாளர்கள் அகற்றிய போது சிலர் ஆனந்தப் பெருக்கில் பாடல்களை பாடினர்

மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் சுமார் 500 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டதைத் தொடர்ந்து சுமார் 17,000 பேரை உள்ளடக்கிய அந்த குடியிருப்பில் கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி  14 நாட்களுக்கு பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்டது.

அந்த குடியிருப்பு பகுதியில் பி.கே.பி.டி. ஆணை முன்கூட்டியே அகற்றப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


Pengarang :