ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவுக்கு வெ. 40 கோடி வழங்கப்பட்டதா? அது பொய்ச் செய்தி!

ஷா ஆலம், ஜூலை 15– கோவிட்-19 தடுப்பு பணிக்காக சிலாங்கூர் அரசிடமிருந்து தாங்கள் 40 கோடி வெள்ளியை பெற்றதாக வெளிவந்த செய்தியை எஸ்.டி.எப்.சி. எனப்படும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு மறுத்துள்ளது.

இந்த பொய்யான செய்தியை வெளியிட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் அப்பணிக்குழு ஈடுபட்டு வருகிறது.

அந்த பொய்யான தகவலை சில தரப்பினர் டிவிட்டர் மற்றும் முகநூல் வாயிலாக பரப்பி வருவதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

இந்த குற்றச்சாட்டை நாங்கள் மிகக் கடுமையாக கருதுகிறோம். குரோத எண்ணத்தில் பரப்பப்படும் இச்செய்தி எங்கள் பணிக்குழுவின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

ஆகவே, அந்த பொய்யான தகவலை பதிவேற்றம் செய்த தரப்பினர் உடனடியாக அதனை மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதோடு வெளிப்படையாக மன்னிப்பும் கோர வேண்டும். தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இக்குழுவில் உள்ள நாங்கள் எந்தவொரு ஊதியமும் பெறாமல்  முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இலவசமாக பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எஸ்.டி.எப்.சி. பணிக்குழு 40 கோடி வெள்ளி சிலாங்கூர் அரசிடமிருந்து பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.


Pengarang :