HEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

தடுப்பூசி மையம் செல்ல வெ.20 கட்டணக் கழிவு- 6,000 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், ஜூலை 20- கிராப் மின் அழைப்பு வாடகைக் கார்கள் மூலம் தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு வழங்கப்படும் 20 வெள்ளி கட்டணக் கழிவைப் பெற நேற்று முன்தினம் வரை சுமார் 6,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அவற்றில் கிட்டத்தட்ட 5,000 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வர்த்தக சமூக கடப்பாட்டுப் பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 300 பேர் முதல் 400 பேர் வரை இந்த கட்டணக் கழிவைப் பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரில் பெரும்பாலானோர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் தகவல் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த மற்றும் கிராப் வாகன சேவைக்கான கணக்கை கொண்டிருப்பவர்களாவும் உள்ளனர் என்றார் அவர்.

வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுவர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோல லங்காட், கஸால் பலாக்கோங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு  அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியைப் பெறுவதற்கான  தேதி கிடைக்கப்பெற்றவர்கள் www.platselangor.com  என்ற அகப்பக்கம் சென்று Inisiatif MBI Bisnes Amal என்ற வாசகத்தை சொடுக்குவதன் மூலம் இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :