Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah. Foto Facebook Istana Negara
ECONOMYHEALTHNATIONALPBT

மாமன்னர் மட்டுமே அவசரகாலத்தை ரத்து செய்ய முடியும்- அமைச்சரவைக்கு அந்த அதிகாரம் இல்லை

ஷா ஆலம், ஜூலை 27– அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உள்ளது. அமைச்சரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று வழக்கறிஞர் ஹனிபா மைடின் கூறினார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 150(3)இன் கீழ் அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாமன்னர் கொண்டுள்ளார். காரணம், இச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 150(2பி) பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த ரத்து நடவடிக்கை மாமன்னரின் கையெழுத்தின் வாயிலாக ஒப்புதல் வழங்கப்பட்டு அல்லது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அது அரசாங்க பதிவேட்டில் இடம் பெற வேண்டும். அதற்கு பின்னரே அவசர காலச் சட்டம் சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக பொருள்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த அவசரகாலச் சட்ட ரத்து நடவடிக்கை இன்னும் அரசாங்கம் பதிவேட்டில் இடம் பெறவில்லை என தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது உண்மையென்றால், அவசரகாலத்தை ரத்து செய்வதற்கு மாமன்னரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை நிருபிப்பதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்பது பொருளாகும் என்றார் அவர்.

வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முடிவுக்கு வரவிருந்த அவசரகாலச் சட்டம் ஜூலை 21 ஆம் தேதியே மீட்டுக் கொள்ளப்பட்டதாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின்  ஹசான் நேற்று  நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அரசாங்கத்தின் இந்நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.


Pengarang :