ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

முன்பதிவின்றி தடுப்பூசி பெறும் திட்டத்தின் வழி 2,500 பேர் பயனடைவர்- பண்டான் இண்டா தொகுதி நம்பிக்கை

அம்பாங், ஆக 2- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பண்டான் இண்டா தொகுதியில் நேற்றும் இன்றும்  நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சுமார் 2,500 பேர் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் அரசின் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்வதன் மூலம் இந்த தடுப்பூசித் திட்டத்தில் முன்பதிவின்றி நேரடியாக வந்து தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பை உள்நாட்டினர் மட்டுமின்றி அந்நிய நாட்டினரும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றை விரைந்து கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு  மாநில ஆட்சிக்குழு முடிவெடுத்துள்ளதாக பண்டான் இண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினயர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இதன் அடிப்படையில் இந்த தடுப்பூசித் திட்டத்தில் அந்நியத் தொழிலாளர்களுக்கும் அனுமதியளிக்க ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பண்டான் இண்டா தொகுதி நிலையில் இங்குள்ள எம்.பி.ஏ.ஜே. மண்டபத்தில் நடைபெறும் செல்வேக்ஸ் தடுப்பூசி இயக்கத்தின் போது  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 மிகுந்த ஆபத்து கொண்ட கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டு பொது மக்கள் பயப்பட வேண்டுமே தவிர, நோயைக் கட்டுப்படுத்தும்  தடுப்பூசியைக் கண்டு பயப்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக மாநில அரசு  20 கோடி வெள்ளி செலவில் 25 லட்சம் சினோவேக் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது.

இவற்றில் 20 லட்சம் தடுப்பூசிகள் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் கீழ் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் 5 லட்சம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ன. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.


Pengarang :