ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி மையம் செல்ல வெ.20 கட்டணக் கழிவு- 8,239 பேரின் விண்ணப்பம் அங்கீகரிப்பு

ஷா ஆலம், ஆக 2- கிராப் வாடகை கார் சேவையை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் திட்டத்திற்கு நேற்று வரை 8,239 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் வழி இதுவரை 68,400 வெள்ளி விண்ணப்பதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிராப் வாடகை கார்களை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் இத்திட்டத்தை சிலாங்கூர் அரசு கிராப் மலேசியா நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

ஆகஸ்டு முதல் தேதி வரை இத்திட்டத்திற்கு 11,223 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. 64,400 வெள்ளி மதிப்பிலான கட்டணத்தை உள்ளடக்கிய 8,239 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டார மக்களை இலக்காக கொண்ட இத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி  தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த கட்டணக் கழிவு திட்டத்திற்கான சிலாங்கூர் மாநில அரசு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :