ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

முன்பதிவின்றி நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கு இன்றே இறுதி நாள்

ஷா ஆலம், ஆக 13- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் வருகைக்கான முன் பதிவின்றி நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 8,000 தடுப்பூசிகள் இன்னும் எஞ்சியுள்ளன.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் செயல்படும் ஐந்து தடுப்பூசி மையங்களில் நான்கு முன்பதிவின்றி தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குவதாக  செலங்கா செயலி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

டிரோப்பிகானா கார்டன் மால் தடுப்பூசி மையத்தில் 4,110 தடுப்பூசிகளும் ஷா ஆலம், டி பல்மா ஹோட்டலில் உள்ள தடுப்பூசி மையத்தில் 1,152 தடுப்பூசிகளும் புக்கிட் ஜாலில் அவுரோரா ப்ளேஸ் மையத்தில் 1,625 தடுப்பூசிகளும் எஞ்சியுள்ளதாக அது கூறியது.

எனினும், பண்டார் பாரு பாங்கியிலுள்ள ஈவோர் மால் தடுப்பூசி மையத்தில் இந்த திட்டத்திற்கான தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

வெளிநாட்டினரைப் பொறுத்த வரை கிளானா ஜெயா பி.கே.என்.எஸ். விளையாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் 24 தடுப்பூசி பற்றுச்சீட்டுகள் உள்ளன

“இது செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்திற்கான இறுதி அழைப்பு. இன்றே இறுதி நாள். இலவச பற்றுச்சீட்டைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு. இன்றே பதிவு செய்யுங்கள், இன்றே தடுப்பூசி பெறுங்கள்“ என அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் வருகைக்கான முன்பதிவின்றி உள்நாட்டினர் நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.

 


Pengarang :