ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் சுமார் 100% பெரியவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், ஆக 14- சிலாங்கூர் மாநிலத்தில்  தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்த 18 வயதுக்கும் மேற்பட்ட  பெரியவர்களில் ஏறக்குறைய 100 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்று விட்டனர்.

இதன் வழி வரும் செப்டம்பர் மாதவாக்கில் மாநிலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசு மிகத் தீவிரமாக உள்ளதாக கூறிய அவர், தடுப்பூசிக்கு பதிந்து கொள்ளாதவர்கள் உடனடியாக தங்கள் தொகுதி அலுவலகத்தை அணுகும்படி கேட்டுக் கொண்டார்.

கூடிய விரைவில் தடுப்பூசி பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் விரைந்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளும்படி சம்பந்தப்பட்டத்  தரப்பினரை கேட்டுக் கொள்கிறோம். வரும் செப்டம்பர் மாதவாக்கில் மாறுபட்ட சூழலை காண்பதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

இங்குள்ள செந்தோசா தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற தொகுதி மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில லவ் அண்ட் கேர் தொண்டூழிய சங்கம் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாநிலத்தில் தடுப்பூசி திட்டம்  விரைவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று அமிருடின் கூறியிருந்தார்.


Pengarang :