ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை தேவை- டாக்டர் குணராஜ் வலியுறுத்து

கிள்ளான், ஆக 14- ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தை தாம் வரும் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த இரு மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறந்தோர் உடல்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத சூழலை மின்சுடலைகள் எதிர்நோக்கி வருவதாக அவர் கூறினார்.

இதன் அடிப்படையில் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் மீதான தீர்மானம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மின்சுடலைகள் பற்றாக்குறை காரணமாக கோவிட்-19 நோய்த் தொற்றால் இறந்தோரின் நல்லுடல்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஐந்து தினங்கள் வரை தகன நடவடிக்கைகாக காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் திறந்த வெளியில் தகனம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

ஆகவே, ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் குறைந்தது ஒரு மின்சுடலை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்றார் அவர்.

செந்தோசா தொகுதி சேவையை மையத்தில் நடைபெற்ற உணவுக் கூடை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து ஊராட்சி மன்றங்களில் மட்டுமே மின்சுடலைகள் உள்ளன. ஷா ஆலம் மாநகர் மன்றம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம், சிப்பாங் நகராண்மைக் கழகம்  ஆகியவையே அந்த ஐந்து ஊராட்சி மன்றங்களாகும்.

பொதுமக்களின் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக மின்சுடலைகளில் தகன நடவடிக்கைகளை இலவசமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்கும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை குணராஜ் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து குடும்பங்கள் உதவி கோரி எங்களை அணுகுகின்றனர். இந்தியர்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு தகனத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் வெள்ளி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்கள்  உதவி புரிய வேண்டும் என்றார் அவர்.


Pengarang :