ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெப்போங் நகைக் கடையில் கொள்ளை- நான்கு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஆக 23–  கெப்போங் வட்டாரத்திலுள்ள நகைக்கடை ஒன்றில்  கொள்ளையிட்ட உள்நாட்டினர் என நம்பப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

கெப்போங், ஜாலான் மெட்ரோ பெர்டானவிலுள்ள அந்த நகைக் கடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த அக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை தாங்கள் தேடி வருவதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பே எங் லாய் கூறினார்.

முக மூடி மற்றும் கவசத் தொப்பி அணிந்திருந்த அவ்வாடவர்கள் சுத்தியல் மற்றும் கோடரியை ஆயுதமாகக் கொண்டு இக்கொள்ளையில் ஈடுபட்டதாக சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் அவ தெரிவித்தார்.

அக்கொள்ளையர்கள் தங்கச் சங்கிலிகள் உள்பட பல லட்சம் வெள்ளி மதிப்பிலான தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு வெற்றிகரமாகத் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் போது, ஆடவன் ஒருவன் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்வது போல் பாவனை செய்த வேளையில் எஞ்சிய மூவர் அதிரடியாக கடையில் நுழைந்து ஓரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பியோடினர் என்றார் அவர்.

இக்கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த போது ஏழு பெண் ஊழியர்கள் அக்கடையில் இருந்ததாகவும் கொள்ளையர்கள் தள்ளியதால் அவர்களில் ஒருவர் மயக்கமுற்றதாகவும் அவர் சொன்னார்.

இக்கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :