Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari berucap pada Sidang Dun di Dewan Bangunan Dewan Negeri Selangor, Shah Alam. 17 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பதவிப் போராட்டத்தில் மக்களை கைவிட்டு விடாதீர்- அரசியல்வாதிகளுக்கு சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், ஆக 23- மக்கள் நலனைக் காக்கும் பொறுப்பை புறக்கணிக்கும் அளவுக்கு பதவிப் போராட்டத்தில் ஈடுபடும் போக்கை கைவிடும்படி அரசியல்வாதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நினைவுறுத்தியுள்ளார்.

அதிகாரப் போராட்டத்தின் விளைவாக அரசியல் நிலைத்தன்மையற்றுப் போகும் பட்சத்தில் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

“அண்மைய காலமாக நம் நாட்டு அரசியலில் காணப்படும் குளறுபடிகள், காரசார விவாதங்கள் மற்றும் நிலைத்தன்மையற்றப் போக்கினால் எனக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் வேதனைகளையும் மறைக்க இயலவில்லை. 

அதிகாரப் போராட்டம் காரணமாக மக்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு பல நாடுகள் வீழ்ந்த வரலாற்றை நமது மாண்புமிக்கள் படிப்பினையாக கொள்ள விரும்பாதது போல் தோன்றுகிறது“ என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில 14வது சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி  வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மக்கள் பிரதிநிதிகள் சிரத்தையெடுத்து கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நோய்த் தொற்று காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்கள் மனநலப் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்பான தரவுகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்படியும் மக்கள் பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார்.

“மாண்புமிகு உறுப்பினர்களே, துன்பத்திலிருந்து மீள்வதற்கு பொதுமக்கள் உங்கள் உதவியை நாடிக் காத்திருக்கின்றனர். அவர்களைத் தேடிச் சென்று உதவுங்கள். தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் அவர்களை நாடிச் செல்லாதீர்கள்“ என்றார் அவர்.


Pengarang :