ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி 871,837 பேர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், ஆக 27– கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பின் வழி இம்மாதம் 16 ஆம் தேதி வரை 871,837 குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட இத்தரப்பினருக்கு உதவுவதற்காக இந்த கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி 27 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.

கித்தா சிலாங்கூர் 1.0 திட்டத்தின் வாயிலாக 4 கோடியே 17 லட்சம் வெள்ளியும் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் வாயிலாக 23 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியும் செலவிடப்பட்டதாக அவர் சொன்னார்.

கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட 46 திட்டங்களில் 11 திட்டங்கள் முழுமையடைந்து விட்டன. சிரமத்தில் இருக்கும் மக்களை இலக்காக கொண்டு இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்றார் அவர்.

சட்டமன்றத்தில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் உதவித் திட்டங்களின் வாயிலாக பயனடைந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

உணவுக் கூடைகளுக்கு பதிலாக ரொக்கத் தொகையை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதா என்ற கேள்விக்கு, இவ்விவகாரம் மீது மாநில அரசு விரிவான ஆய்வினை மேற்கொள்ளும் என்று அவர் பதிலளித்தார்.

ரொக்கமாக வழங்கப்படும் உதவித் தொகை கைதவறி காணாமல் போவது, அத்தியாவசியப் பொருள்களுக்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்கு செலவிடுவது போன்ற பிரச்னைகள் எழுவதற்குரிய சாத்தியத்தையும் ஏற்படுத்தும் என்றார் அவர்.


Pengarang :