ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மத்திய-மாநில அரசு இடைவெளியைக் குறைக்க சிறப்பு பிரிவு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், ஆக 29- மத்திய அரசுக்கும் சிலாங்கூர் அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் தொழிலாளர் திறன் வளர்ப்பு பிரிவை (யு.பி.பி.எஸ்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது தொடர்பான மத்திய அரசின் மறுசீரமைப்புத் திட்டம் ஆள்பலத் துறையில் மாநில அரசின் பங்களிப்பைக் குறைத்து விட்டதாக சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் தொழிலாளர் திறன் வளர்ப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.

ஆகவே, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாக இந்த பிரிவை அமைக்க இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தொழிலாளர் திறன் வளர்ப்புத் துறை கடந்தாண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டதால் இலக்கைத் தீர்மானிப்பது தொடர்பான வழிகாட்டலும் திட்டமிடலும் அதற்கு தேவைப்படுகிறது. ஊராட்சி மன்றங்கள், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களை உட்படுத்தி மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசும் பங்கேற்பதற்கு இதன் வழி வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த யு.பி.பி.எஸ் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான அவர்  கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் திறன் வளர்ப்புத் துறை வலுப்படுத்தப்படும் என்று கணபதிராவ் ஆகஸ்டு மாத 13 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :