ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 மரணங்கள்- சிறப்பு நிவாரணக் குழுவை அரசு அமைக்க வேண்டும்- குணராஜ் கோரிக்கை

ஷா ஆலம், ஆக 31- கோவிட்-19  நோய்த் தொற்று பரவலால் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள  பொது மக்களுக்கும், மற்ற வகைகளில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள  எல்லா மக்களுக்கும் உதவும் வகையில் சிறப்பு நிவாரணக் குழுவை சிலாங்கூர் அரசு அமைக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

மாநில சட்டமன்றத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய அவர்,  பொருளாதார ரீதியிலும் மன ரீதியிலும் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உரிய உதவிகளை வழங்குவதில்  மாநில அளவில் அமைக்கப்படும் நிவாரணக் குழு பெரிதும் துணை புரியும் என்றார்.

குறிப்பாக, கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணமடையும் முஸ்லீம் அல்லாதோரின் உடல்களை தகனம் செய்வதில் நிலவும் பெரும் சிரமத்தைக் களைவதில் மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது ஐந்து பகுதிகளில் மட்டுமே ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் மின்சுடலைகள் உள்ளன. அவற்றில் உடல்களை தகனம் செய்ய 150 வெள்ளி மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் வேளையில் தனியார் வசம் உள்ள மின்சுடலைகளில் 1,800 வெள்ளி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் மின்சுடலைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து மின்சுடலைகளிலும் கட்டண முறையும் சீரமைக்கப்பட வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

நோய்த் தொற்று பாதிப்பினால் மரணமடையும் குடும்பத்திற்கு அரசு உதவி நிதி அளிப்பது ஆறுதலான அம்சம் என்றாலும் அதைப்பெற மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், அந்த உதவி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய நல வாரியத்தைப் போல இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்  என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரச்னைகளைக் களைவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனி அதிகாரிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் சேவையைப் பெறும் வகையில் பல்நோக்கு நிவாரண மையத்தை சிலாங்கூர் அரசாங்கம் அமைத்தால், பாதிக்கப்படும் குடும்பங்கள் இந்த கோவிட்- 19 நோய்த் தொற்று நெருக்கடியில் இருந்து மீட்சிபெற வசதியாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :