ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உணவுக் கூடைத் திட்டத்திற்கு 800,000 வெள்ளி எம்.பி.ஐ. ஒதுக்கீடு 

ஷா ஆலம், செப் 2- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை உணவுக் கூடைத் திட்டத்திற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் எட்டு லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

அரசு சாரா அமைப்புகள், குடியிருப்பாளர் சங்கங்கள், தொகுதி சேவை மையங்கள் உள்பட 50 அமைப்புகளின் வாயிலாக தேவைப்படும் தரப்பினருக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாடு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த திட்டத்தில் ஊராட்சி மன்றங்களும் பங்கேற்றன. இது தவிர 99 ஸ்பீட் மார்ட் மற்றும் கே.கே. சூப்பர் மார்ட் மூலம் 6,000 பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

தலா ஐம்பது வெள்ளி மதிப்பிலான அந்த பற்றுச் சீட்டுகளைக் கொண்டு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த உதவித் திட்டம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட வேளையில் இத்திட்டத்தின் வெற்றிக்கு 150 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் உதவி புரிந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் சமூக நல கிளப்பிடம் உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவுக் கூடைகள் வழங்கப்படும் என்றத் தகவலையும் அகமது அஸ்ரி வெளியிட்டார்.

 


Pengarang :