ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாசார் மெஸ்ரா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் சமையல் பொருள்கள் விற்பனை

ஷா ஆலம், செப் 5- பாசார் மெஸ்ரா திட்டத்தின் கீழ் மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் குறைந்த விலையில் சமையல் பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்பினை பெற முடியும்.

வெறும் இருபது வெள்ளி விலையில் இரு கோழிகள், முட்டை, காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்குவதற்கு இந்த பாசார் மெஸ்ரா திட்டம் வகை புரிவதாக நகர்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த பாசார் மெஸ்ரா திட்டத்தின் கீழ் விற்கப்படும் சமையல் பொருள்கள் சந்தையில் விற்கப் படுவதைக் காட்டிலும் மூன்று மடங்கு விலை குறைவானதாகும் என்று அவர் சொன்னார்.

மக்களுக்கு உதவி வழங்குவதில் மக்கள் பிரதிநிதிகள் புதிய அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்களின்  பொருளாதார சுமையைக் குறைப்பதில் இத்திட்டம் ஒரளவு துணை புரியும் என்றும் அவர் சொன்னார்.

உணவுக் கூடைகளை வழங்கும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தின் வழி 20 வெள்ளி செலவில் அவர்கள் 60 வெள்ளி பெறுமானமுள்ள பொருள்களைப் பெற முடியும் என்றார் அவர்.

இங்குள்ள ஹைக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பு பகுதியில் இந்த பாசார் மெஸ்ரா திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பாசார் மெஸ்ரா திட்டத்தில் 200 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் எனக் கூறிய அவர், மாநிலத்திலுள்ள இதர எட்டு இடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றார்.


Pengarang :