OLYMPUS DIGITAL CAMERA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

15 மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் சி.சி.டி.வி. பொருத்த வெ.150,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், செப் 5- சிலாங்கூரிலுள்ள 15 மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில்  சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த இவ்வாண்டில் 150,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு அண்டை அயலார் பாதுகாப்பு திட்டத்தின் (செரோஜா) கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் தலா 10,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக 360 டிகிரி சுழலும் வசதி கொண்ட கேமராக்கள் இப்பகுதிகளில் பொருத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் தலையாய கடமையாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்றார் அவர்.

இதனிடையே, செரோஜா திட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 80 மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் 800,000 வெள்ளி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாக  சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தித்ன உதவி நிர்வாக அதிகாரி ஷாஹிசாம் சப்ரி கூறினார்.

ஒவ்வொரு குடியிருப்பு பகுதியும் நான்கு கேமராக்கள், ஒரு ஒளிப்பதிவு கருவி மற்றும் ஒரு மோனிட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :