Halimey Abu Bakar menyantuni penduduk dalam program Ziarah Rakyat di Kelana Jaya pada 20 Ogos 2020. Foto Facebook Halimey Abu Bakar
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுய பரிசோதனை கருவி- ஏழைகளுக்கு ஸ்ரீ செய்தியா, பண்டார் உத்தாமா தொகுதிகள் முன்னுரிமை

ஷா ஆலம், செப் 6- கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளை வழங்குவதில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதை ஸ்ரீ செத்தியா மற்றும் பண்டார் உத்தாமா தொகுதிகள் தலையாயக் கடமையாக கொண்டுள்ளன.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பி40 தரப்பினரே அதிகம் உள்ளதாக  ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

சுக்கா எனப்படும் சமூக சுகாதார தொண்டூழியர் அமைப்புடன் அடுத்த வாரம் சந்திப்பு நடத்தப்பட்டப் பின்னரே இந்த சுய பரிசோனை கருவிகளை விநியோகம் செய்வதற்கான வழிமுறைகள் முடிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

ஸ்ரீ செத்தியா தொகுதியில் தற்போது கோவிட்-19 சம்பவங்கள் குறைந்து வருவதால் தொடக்க கட்டமாக இத்தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ள 1,000 சுய பரிசோனை கருவிகள் போதுமானவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த சுய பரிசோதனைக் கருவிகளைப் பெறத் தகுதி உள்ளவர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக பண்டார் உத்தாமா தொகுதி உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த கருவிகளை தொகுதி சேவை மையத்தின் வாயிலாக அல்லது உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வுகளின் போது பொதுமக்களுக்கு விநியோகிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு 60,000 சுய பரிசோதனை கருவிகள் மாநில அரசு கட்டங் கட்டமாக விநியோகிக்கும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :