ECONOMYHEALTHMEDIA STATEMENT

தடுப்பூசி பெற்றவர்கள் விபரங்களை மைசெஜாத்ரா செயலியில் விரைந்து பதிவிடுங்கள்- அரசாங்கத்திற்கு கோரிக்கை

ஷா ஆலம், செப் 8- சிலாங்கூர்  மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை மைசெஜாத்ரா செயலியில் விரைந்து பதிவிடும்படி மத்திய அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை இடையூறின்றி மேற்கொள்வதற்கு மைசெஜாத்ரா செயலியில் உள்ள தகவல்கள் இன்றியமையாதவையாக விளங்குவதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்த போதிலும் இப்பிரச்னையைக் களைவதற்கு இதுவரை எந்தவொரு ஆக்ககரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார். 

செல்வேக்ஸ் திட்டத்தை மேற்கொள்ளும் செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத் தரப்பினர் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி விட்டதால் மைசெஜாத்ரா செயலியில் அவற்றை பதிவிடுவதில் தாமதம் ஏற்படுவதற்கு எந்த காரணமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெற்ற 14 நாட்களுக்குப் பின்னரும் அதன் தொடர்பான விபரங்கள் மைசெஜாத்ரா செயலியில் இடம் பெறாதது தொடர்பில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தாங்கள் பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று வருவதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

மைசெஜொத்ரா செயலியில் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத காரணத்தால் வர்த்தக மையங்கள் ,பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாதது உள்பட பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்க நேரிடுகிறது என்றார் அவர்.

 


Pengarang :