ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி மையங்களுக்கு செல்ல கட்டணக் கழிவு-13,795 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், செப் 10- கிராப் வாடகைக் கார் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவை வழங்கும் திட்டத்திற்கு  பதிமூன்றாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை மாநில அரசு பெற்றது.

இம்மாதம் 3 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இத்திட்டத்திற்கு 13,795 பேரிடமிருந்து தாங்கள் விண்ணப்பங்களைப் பெற்றதாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி நோர் கூறினார்.

அவற்றில் 10,204 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதுவரை 8,391 பேர் 80,714 வெள்ளித் தொகையை இக்கட்டண சேவைக்காக பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு முன்பு தினசரி 300 பேர் வரை விண்ணப்பம் செய்த வேளையில் இப்போது அந்த எண்ணிக்கை 20 முதல் 50 ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதிகமானோர் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்று விட்ட காரணத்தால் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. எனினும் இத்திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்கள் கிராப் வாடகைக் கார் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் இத்திட்டம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இம்மாதம 30ஆம் தேதி வரை  அமலில் இருக்கும்.

 


Pengarang :