HEALTHMEDIA STATEMENT

நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவை வழங்கப்படாது

கிள்ளான், செப் 12- நடமாடும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று தடுப் பூசி செலுத்தும் சேவை வழங்கப்படாது. மாறாக, குறிப்பிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கு பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடு செய்யப்படும்.

உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தடுப்பூசி மையத்திற்கு நேரில் செல்வதில் சிரமத்தை எதிர் நோக்குவோர் தங்கள் வட்டார தலைவர்களை அணுகும்படி சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கேட்டுக் கொண்டார்.

இத்தகையோரின் பெயர்கள் மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள மேரு பாசார் புசார் காம்ப்லெக்ஸில் நடைபெற்ற பண்டார் பாரு கிள்ளான் தொகுதியில் நிலையிலான செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த தடுப்பூசியை பெறுவதற்கு அந்நிய நாட்டவர்கள் உள்பட யாருக்கும் கட்டணம் விதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் மாநில அரசு இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தை நேற்று தொடக்கியது.

இந்த திட்டம் 11 சட்டமன்றத் தொகுதியில் ஒரு வார காலத்திற்கு காலை 9.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

Pengarang :