ECONOMYNATIONAL

2021 ன் முதல் 6 மாத வரவு \ செலவு புள்ளிவிவரம், பெரிக்காத்தான் நேஷனலின் பொருளாதார தோல்வியின் அடையாளம்!

ஷா ஆலம், செப் 23- இவ்வாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மத்திய அரசின் நிர்வாகச் செலவினம் 16,420 கோடி வெள்ளியாக இருந்தது. ஆனால் வருமானம் 10,064 கோடி வெள்ளியாக மட்டுமே பதிவானது.

நாட்டின் நிர்வாகச் செலவினம் கடந்தாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் 5.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக துணை நிதியமைச்சர் சஹார் அப்துல்லா கூறினார்.

இக்காலக்கட்டத்தில் நிர்வாகச் செலவினங்களுக்கு 11,740 கோடி வெள்ளியும் மேம்பாட்டுப் பணிகளுக்கு 2,840 கோடி வெள்ளியும் கோவிட்-19  நிதித் திட்டத்திற்கு 1,840 கோடி வெள்ளியும் செலவிடப்பட்டதாக அவர் சொன்னார்.

நிர்வாகச் செலவினங்களில் பெரும் பகுதி அதாவது 65.5 விழுக்காடு (4,320 கோடி வெள்ளி) சம்பளத்திற்கும் 1,840 கோடி வெள்ளி கடன் அடைப்புக்கும் 1,530 கோடி வெள்ளி ஓய்வூதியத் திட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டன என்றார் அவர்.

மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 82.5 விழுக்காடு பொருளாதார மற்றும் சமூகவியல் துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வேளையில் கோவிட்-19 நிதியில் ஒரு பகுதி தேசிய பரிவுத் திட்டம், சம்பள உதவித் தொகை, சிறப்பு பரிவு கடனுதவித் திட்டம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

மக்களையில் இன்று புக்கிட் பிந்தாங் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் பூங் கூய் லுன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டின் வருமானம் கடந்தாண்டைக் காட்டிலும் 4.6 விழுக்காடு அதிகரித்து 10,064 கோடி வெள்ளியாக உயர்ந்த போதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் மந்தமான அடைவு நிலையை பதிவு செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :